அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு....வெற்றிகளும் பரிசுகளும்....

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு....வெற்றிகளும் பரிசுகளும்....
Published on
Updated on
1 min read

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். 

அலங்காநல்லூர்:

பொங்கல் பண்டிகையொட்டி உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். 

சீறிப்பாய்ந்த காளைகள்:

ஆயிரம் காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், தலா 25 முதல் 40 வீரர்கள் என்ற விகிதத்தில் 10 சுற்றுகள் நடத்தப்பட்டது.  முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர். 

உற்சாகம்:

அப்போது, மாடுபிடி வீரர்களை மிரட்டிய காளைகள், 'முடிந்தால் பிடித்துப் பார்' என வீராப்பாக திரும்பி நின்றன.  இதனால், காளையர்கள் மிரட்சியுடன் தயங்கி நின்றனர். அப்போது, பார்வையாளர்கள் கைகளை தட்டி காளைகளை உற்சாகப்படுத்தினர்.

முதல் பரிசு:

இதனையடுத்து, 9-ம் சுற்று முடிவில் 734-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  இதில் 26 காளைகளை அடக்கிய இளைஞர் அபிசித்தர் முதலிடம் பிடித்தார்.  அவருக்கு நிசான் கார் மற்றும் கன்றுடன் கூடிய பசு மாடு பரிசாக வழங்கப்பட்டது. 

இரண்டு மூன்றாமிடம்:

20 காளைகளை அடக்கி 2-ஆம் இடம் பிடித்த ஏனாதி பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.  இதேபோல், 12 காளைகளை பிடித்து 3-ஆம் இடம் பிடித்த ரஞ்சித்துக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 

சளைக்காத காளைகள்:

மாடுபிடி வீரர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனின் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.  இதேபோல், தலா இரண்டு மற்றும் 3-ஆம் இடம் பிடித்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

காயமடைந்தோர்:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உாிமையாளா்கள்,  பாா்வையாளா்கள் உட்பட 48 போ் காளைகள் தூக்கி வீசியதில் காயமடைந்தனா்.  இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

தகுதி நீக்கம்:

இந்த போட்டியில் மது அருந்தியது, உடல் எடை குறைவு போன்ற காரணங்களால் 20 மாடுபிடி வீரா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com