இனி சென்னையில் 12 வழித்தடங்களில் கூடுதல் பேருந்து...எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா?

இனி சென்னையில் 12 வழித்தடங்களில் கூடுதல் பேருந்து...எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா?
Published on
Updated on
1 min read

சென்னையில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வதை தடுக்க 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. 

ஆபத்தான பயணம்:

சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள காரணத்தினால் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை தவிர்ப்பதற்காகவே போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

20 கூடுதல் பேருந்து:

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாணவர்களின் ஆபத்தான பயணமுறையை தவிர்ப்பதற்கு முதற்கட்டமாக,12 வழிதடத்தில் 20 கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்தில் இருந்து 22,000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிக்க ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

குழு அமைப்பு:

இதனிடையே, கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களை கண்டறிய போக்குவரத்து துறையின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஆராய்ந்து கூட்ட நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களை அறிவித்த நிலையில்,  குறிப்பிட்ட அந்த வழித்தடங்களில் மட்டும் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த வழித்தடங்கள்:

அதன்படி, 29A பெரம்பூர் to எக்மோர், M88 போரூர் to குன்றத்தூர், M88 போரூர் to வடபழனி, 54R ராமபுரம் to குமணசாவடி, 54R ராமபுரம் to டைட்டில் பார்க், 153 சி.எம்.பி.டி to குமணசாவடி, 147 தி. நகர் to அம்பத்தூர், 56A எண்ணுர் to வள்ளலார் நகர், 38A மாதவரம் to பிராட்வே, 5G கண்ணகி நகர் முதல் வேளச்சேரி, 21G கிண்டி to பிராட்வே, 21X கிண்டி இருந்து மந்தைவெளி வழியாக பிராடவே செல்லும் பேருந்து என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com