சென்னை பனையூரில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
வாரிசு படரிலீஸ் சிக்கல்:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதன்படி, நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ”வாரிசு” திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்வதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் தியேட்டர் கிடைக்காததால் பொங்கலுக்கு ”வாரிசு” படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, சென்னை பனையூரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
இதனைத்தொடர்ந்து, பனையூர் தலைமை அலுவலகத்திற்கு பிற்பகல் வருகை தந்த நடிகர் விஜய்க்கு, ரசிகர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களை பார்த்து நடிகர் விஜய் கையசைத்த போது ”தலைவா தலைவா” என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, வாரிசு திரைப்பம் ரிலீஸ் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். பின்னர், தொண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே சென்று விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் மன்ற பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டார். விரைவில் மற்ற மாவட்ட செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், வாரிசு திரைப்படம் வெளியீடு தொடர்பாக நடிகர் விஜய் அறிவிப்பார் என்றும் புஸ்சி ஆனந்த் அப்போது தெரிவித்தார்.