”தினமும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு வருவான்” மாரிமுத்துவின் பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி!

”தினமும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு வருவான்” மாரிமுத்துவின் பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி!
Published on
Updated on
1 min read

மிகுந்த கஷ்டமான குடும்ப சூழலுக்கு இடையே தனது கடின உழைப்பால் நடிகர் மாரிமுத்து திரைத் துறையில் வளர்ச்சி கண்டதாக அவரது ஆசிரியர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம், வருசநாடு அருகே பசுமலைத்தேரி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆசிரியர்கள், மாரிமுத்துவின் பள்ளிக் கால வாழ்க்கை பற்றி பேசினர். மயிலாடும்பாறையில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு நாள்தோறும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் மாரிமுத்து நடந்து வருவார் எனவும், மிகுந்த வறுமைக்கு இடையே கடின உழைப்பால் திரைத்துறையில் வளர்ந்து வந்த மாரிமுத்துவின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவரது ஆசிரியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

நெல்லையில் இருந்து தங்களது தாயாருடன் வீல் சேரில் வருகை தந்த மாற்றுத்திறனாளி சகோதரிகள் மெர்ஸ்லி மற்றும் ஆன்ஸ்லி ஆகியோர் மாரிமுத்துவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com