ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கும் கே.எஸ்.தென்னரசு முதற்கட்ட பிரசாரத்தை துவக்கினார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பினர், பிறகு இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் எனக் கூறி, கே.எஸ். தென்னரசுவை அதிமுக வேட்பாளராக ஒப்புக் கொண்டனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், கே.எஸ்.தென்னரசு மணல்மேடு முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கே.எஸ்.தென்னரசுவுக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் வெற்றி, இலக்கை எட்டியிருப்பதாக தெரிவித்தார்.
பிரச்சாரத்திற்கு பிறகு இன்று மதியம் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.