கும்மிடிபூண்டி அருகே தற்காலிக ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர்
குருவராஜகண்டிகை அரசு நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்நிலையில் பள்ளியின் தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு, ஹரிஹரனை பிரம்பால் அடித்ததால், ஹரிஹரனுக்கு கைகள் கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரிந்தும் பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பள்ளியில் ஐஸ் கட்டி வைத்து வீக்கத்தை குறைத்துள்ளனர். இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து வந்து ஹரிஹரனை பிரம்பால் அடித்த தற்காலிக ஆசிரியர் மோகன்பாபுவை செருப்பால் அடித்து கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியர் மோகன்பாபுவை சக ஆசிரியர்கள் மீட்டு அழைத்து சென்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.