ஜம் தாரா கொள்ளை கும்பலை விட பத்து மடங்கு சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் மாவட்டங்களுக்கு சென்று வட மாநில மோசடி கும்பலை கைது செய்த சென்னை போலீஸ்...!
சென்னை ஏழு கிணறு போர்ச்சுக்கீரியர் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவரது மூத்த மகள் மகாலட்சுமி(19). சாந்தி கருத்து வேறுபாடு காரணமாக கணவர் அருண்குமாரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மகாலட்சுமி தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், பொருளாதார ரீதியாக பிந்தங்கியுள்ள தனது குடும்பத்தினரின் சுமையை போக்க சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்ற விளம்பரத்தை கண்ட மகாலட்சுமி, அதில் முதலீடு செய்துள்ளார். சுமார் 30 ஆயிரம் வரை மோசடியில் இழந்த மகாலட்சுமி மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்த முத்தியால்பேட்டை போலீசார் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகு வறுமையின் காரணமாக மகாலட்சுமியின் தாய் சாந்தி, தனது மகள் இழந்த பணத்தை திருப்பித் தருமாறு அதே மோசடி இன்ஸ்டாகிராம் ஐடியில் குறுஞ்செய்தி அனுப்பியது சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் மோசடி நிறுவனம் தொடங்கிய இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கிய செல்போன் எண் மற்றும் மாணவி செலுத்திய பணத்தின் வங்கி கணக்கு விவரங்களை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிய போது, கொல்கத்தா கிதிர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஏடி.எம்மில் பணபரிவர்த்தனை செய்யப்பட்டதும், 4 நாட்களுக்கு ஒரு முறை வந்து அதே ஏடி.எம்மில் மோசடி கும்பல் பணம் எடுப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் கொல்கத்தா மாநிலத்திற்கு விரைந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து அதே ஏடி எம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மோசடி கும்பல் அங்கு வரவில்லை.
இதனையடுத்து மோசடி கும்பல் பயன்படுத்திய செல்போன் எண்ணில் ஆன்லைன் உணவு டெலிவரி ஆர்டர் செய்தது குறித்து போலீசாருக்கு தெரியவர, ஆன்லைன் டெலிவரி நிறுவனத்திலிருந்து அந்த மோசடி கும்பலின் முகவரியை பெற்ற சென்னை போலீசார் கிதிர்பூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
பின்னர், மோசடி கும்பலை பிடிப்பதற்காக கொல்கத்தா போலீசாரின் உதவியை சென்னை போலீசார் நாடிய போது, அந்த பகுதியில் அவ்வளவு எளிதாக போலீசார் நுழைய முடியாது என கூறிய போதும், சென்னை போலீசார் விடாப்பிடியாக மோசடி கும்பல் பதுங்கிய பகுதிக்கு விரைந்தனர். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த 3 பேர் கொண்ட மோசடி கும்பலை சென்னை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இவர்கள் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த அமானுல்லா கான்(20), முகமது பைசல்(21) மற்றும் முகமது ஆசிப் இக்பால்(22) என்பதும் இவர்கள் அனைவரும் கல்லூரி முடித்து இருப்பதும் தெரியவந்தது. பின்னர் இவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. பணக்கார குடும்பத்தில் பிறந்த மூன்று பேரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சைபர் கிரைம் மோசடி செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. குறிப்பாக இவர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், டெலிகிராம் மூலமாக I am aadvika kapoor மற்றும் I am single -- என பல்வேறு பெயர்களில் ஐடி உருவாக்கி 750 ரூபாய் செலுத்தினால் 20 நிமிடத்தில் 2500 ரூபாய் லாபம் கிடைக்கும் என கவர்ச்சி விளம்பரங்களை அறிவிக்கின்றனர். மேலும் அதுமட்டுமின்றி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் தாமாக சென்று கவர்ச்சி விளம்பரங்களை பெர்சனலாக அனுப்புகின்றனர்.
கவர்ச்சி விளம்பரங்களை நம்பிய கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பலரும் அதிக வட்டியை நம்பி அவர்களது ஜி.பே எண்ணிற்கு பணத்தை போட்டு, முதலில் லாபம் கொடுப்பது போல பாவலா காட்டிவிட்டு பின்னர் அதிக பணம் செலுத்த வைத்து ஜி.எஸ்.டி, அனுமதி கட்டணம் என பொய்யாக கூறி மொத்தமாக சுருட்டி செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதே போல தான் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி மகாலட்சுமி 30ஆயிரம் ரூபாய் வரை இழந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. சென்னை உட்பட இந்தியா முழுவதும் பல்வேறு இளைஞர்களிடம் இதே போல மோசடி செயல்களில் ஈடுபட்டு, 20லட்சம் ரூபாய் சுருட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்த பணத்தில் மூன்று இளைஞர்களும் ஐபோன், விலையுயர்ந்த ஆடை, தாய்லாந்து சுற்றுப்பயணம் என உல்லாசமாக வாழ்க்கை அனுபவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஜம்தாரா சைபர் கிரைம் கும்பல் போல கொல்கத்தாவில் கிதிர்பூர், பட்காஞ்சி, இக்பால்பூர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான மக்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், ஜம்தாராவை விட 10 மடங்கு இந்த பகுதிகளில் சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபட்டோரை இதுவரை எந்த மாநில போலீசாரும் நெருங்கியதில்லை எனவும் முதல்முறையாக சென்னை போலீசார் நெருங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க } 'ஆன்லைன் டிரேடிங்' மோசடி கும்பல் கைது...!!
பொதுமக்கள் ஆர்.பி.ஐ அனுமதி வழங்கிய நிதி நிறுவனத்தில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் வரும் தேவையில்லாத விளம்பரம் மற்றும் லிங்குகளை தொட வேண்டாம் என வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யாபாரதி தெரிவித்துள்ளார். மேலும் இழந்த தொகை என்னவோ குறைவு தான் ஆனால் அதன் மூலமாக ஏற்பட்ட இழப்பு பெரிதளவு என்பதால் மெனக்கெட்டு குற்றவாளிகளை கைது செய்து இருப்பதாகவும், மீண்டும் இது போன்ற மோசடி செயல்களில் ஒருவரும் உயிரிழக்க கூடாது என்ற நோக்கம் மட்டுமே என தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து வங்கி கணக்கில் இருந்த 10ஆயிரம் ரூபாயை போலீசார் முடக்கி உள்ளனர். இதனையடுத்து சந்தேக மரணம் என்ற வழக்கை மாற்றி தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க } ஆன்லைன் வர்த்தகத்தால்...... தொடரும் தற்கொலைகள் ..!