திமுக அமைதி பேரணியில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர் உயிரிழப்பு...!

திமுக அமைதி பேரணியில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்  உயிரிழப்பு...!
Published on
Updated on
1 min read

கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற 146வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் கலைஞர் நினைவிடம் வரை அமைதி பேரணி சென்றனர். இந்த பேரணியில் திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் என அனைவரும் பங்கேற்றனர். 

அந்த வகையில், இப்பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்முகம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி சண்முகம் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து  மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறைந்த மாநாகராட்சி உறுப்பினர் சண்முகத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவரது உடல் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com