அலுவலகத்திற்கு தாமதம்: தட்டிகேட்ட உயரதிகாரி; அடியாளை வைத்து தாக்கிய பெண் ஊழியர்!

அலுவலகத்திற்கு தாமதம்:  தட்டிகேட்ட உயரதிகாரி; அடியாளை வைத்து தாக்கிய பெண் ஊழியர்!
Published on
Updated on
2 min read

தபால் நிலையத்தில் பெண் ஊழியர் பணிக்கு காலதாமதமாக வருவதை தட்டி கேட்டதால் அடியாட்களை வைத்து வழிமறித்து கத்தியால் தாக்கிய சம்பவம் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் அரங்கேறி உள்ளது.

மணலி அருகே மூலச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 56) திருவொற்றியூர் தபால் நிலையத்தில் நிலைய அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

மணலி எம்.எப்.எல். சந்திப்பு அருகே சென்ற போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்மநபர்கள் அசோகனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து காரை குறுக்கே நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து வெளியே வந்த 3 நபர்கள் அசோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மீண்டும் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். இதில் வலது கை, வயிற்று பகுதியில் பலத்த வெட்டு விழுந்து படுகாயம் அடைந்த அசோகன், ரத்த வெள்ளத்தில் துடி. துடித்தார். 

இதை பார்த்த பொதுமக்கள் சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அசோகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அசோகனை கொலைசெய்ய முயன்றவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் சம்பத்தப்பட்ட இருவரை கைது அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் திருவொற்றியூர் தபால் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சுகன்யா என்ற சக ஊழியர் எப்பொழுதும் பணிக்கு தாமதமாக வருவதும் பணிகளில் சரிவர செய்யாமல் காலம் தாழ்த்துவதும் தொடர்கதையாக இருந்துள்ளது. 

இதனையொட்டி நிலைய அலுவலராக இருந்த அசோகன் அவரை கண்டித்து உள்ளார். தொடர்ந்து தவறு மேல் தவறு செய்த சுகன்யாவை கடுமையாக கண்டித்தது உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா தனது கணவனிடம் இது போன்று பணிபுரியும் இடத்தில் புதியதாக வந்த சக ஊழியர் தொடர்ந்து வேலை வாங்குவதும் அடிக்கடி கண்டிப்பதுமாக இருந்து வருவதால் அவரை கவனிக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவரது கணவர் மீஞ்சூரில் உள்ள தனது நண்பர்களிடம் கூறி அவர் வரும் வழியில் வழிமறித்து தாக்குவதற்கு திட்டம் தீட்டி இருந்தனர். அதனை தொடர்ந்து மீஞ்சூரில் உள்ள ஒரு நபரிடம் காரை வாங்கி அந்த காரில் நம்பர் பிளேட் உள்ளிட்டவைகளை மாற்றியுள்ளனர். சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில்  சென்ற அசோகனை வழிமறித்து மூன்று பேர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் சுதாகர் (37) மற்றும் மீஞ்சூர் அண்ணாமலை நகரை சேர்ந்த செந்தில்குமார் ( 32) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com