கொசுக்களுக்கெல்லாம் ஒரு தினமா...? அதுவும் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறதா..?

இன்று உலக கொசுக்கள் தினம்...!

கொசுக்களுக்கெல்லாம் ஒரு தினமா...? அதுவும் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறதா..?

' கடுகு சிறுத்தாலும் காரம் போகாது ' என்ற பழமொழிக்கேற்ப, கொசுக்கள் சிறிய உயிரினம் தானே என்று எண்ணக்கூடாது. அவைகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். அப்படி கொசு கடித்தால் பரவக்கூடிய நோய்கள் ஏராளம்.  கொசுக்கள் ஜிகா வைரஸ், வெஸ்ட் நைல் வைரஸ், சிக்குன்குனியா வைரஸ், டெங்கு மற்றும் மலேரியாவை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. 

கொசுக்களால் பரவக்கூடிய நோய்கள் :

டெங்கு :

பொதுவாக இந்த தோற்று ஏற்பட்ட 3 முதல் 14 நாட்களுக்கு பிறகு தான் இந்தக் அறிகுறிகள் தோன்றும். இதன் அறிகுறிகளாக, காய்ச்சல், உடல் வலி, உடல் சோர்வு, குமட்டல் ஆகியவை ஏற்படும். மேலும் சிலருக்கு உட்புற ரத்தப்போக்கு, அதிர்ச்சி மற்றும் மரணம் கூட ஏற்படலாம். உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் டெங்கு நோயால், 36,000 பேர் உயிரிழக்கின்றனர்.

ஜிகா வைரஸ் :

இது கொசுக்களால் பரவும் வைரஸ்களால் உருவாகும் நோயாகும். இதற்கென்று தனி அறிகுறிகள் இல்லை, இருப்பினும், டெங்கு காய்ச்சலை போலவே காய்ச்சல், சிவந்த கண்கள், தலைவலி, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். 

மலேரியா  :

மலேரியா என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு வகை நோய். இது குணப்படுத்தக்கூடியது. ஆனால் இந்த நோய், இன்றளவும் மக்களை அச்சுறுத்தும் ஒரு வகை நோயாகவே உள்ளது. அனைத்து கொசுக்களும் மலேரியாவை பரப்புவதில்லை. பெண் அனோபிலஸ் கொசுக்கள் மட்டும் தான் மலேரியாவை பரப்புகிறது. ஓவ்வொரு ஆண்டும் சுமார் 4,35,000 பேர் மலேரியாவால் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் உலகில் ஆண்டுக்கு 219 மில்லியன் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக  மதிப்பிடப்பட்டுள்ளது. 

உலக கொசு நாள் வரலாறு :

1897 ம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவர், சர் ரொனால்ட் ரோஸ் என்பவர் பெண் அனோபிலஸ் கொசுக்கள் தான் மனிதர்களுக்கு மலேரியாவை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபிடித்த நாள் ஆகஸ்ட் 20. அதன் நினைவாக தான், ஆகஸ்ட் 20 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக கொசுக்கள் தினம்  அனுசரிக்கப்படுகிறது. அதாவது மலேரியா மற்றும் கொசுக்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடித்ததைக் கௌரவிக்கும் வகையில் உலக கொசு நாள் உருவாக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு, 1902 ம் ஆண்டில் உடலியல் மற்றும் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்றார். 

இந்த நாளானது, மலேரியாவின் காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மலேரியாவை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிக்காக நிதி திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கொசுக்களுக்கும் மலேரியாவுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி எல்லா இடங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரோஸ் உடனடியாக இந்த உலக கொசு நாள் தொடக்கத்தை அறிவித்தார். 

உலக கொசுக்கள் தினத்தின் கருப்பொருள் :

2022ம் ஆண்டுக்கான உலக கொசுக்கள் தினத்தின் கருப்பொருள். " மலேரியா நோயின் சுமையைக் குறைக்கவும், உயிர்களைக் காக்கவும் புதுமையை பயன்படுத்துங்கள் "  என்பதாகும். ஏடிஎஸ் கொசுக்கள் சிக்குன்குனியா, டெங்கு மற்றும் ஜிகா போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றன. அதே போல்  அனோபிலஸ் கொசுக்கள் மலேரியா மற்றும் நிணநீர் (lymph) ஃபைலேரியாசிஸை ஏற்படுத்துகின்றன.