ஜெமினி பாலத்தில் விபத்தில் சிக்கிய 25G அரசு பேருந்து...!

ஜெமினி பாலத்தில் விபத்தில் சிக்கிய 25G அரசு பேருந்து...!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் மாநகர பேருந்து பக்கவாட்டு சுவரில் மோதி விபத்தில் சிக்கிக்கொண்டது.

அண்ணா சதுக்கத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்றுக் கொண்டிருந்த 25G அரசு விரைவுப் பேருந்து, ஜெமினி மேம்பாலத்தில் சென்றபோது அங்கிருந்த பக்கவாட்டு சுவரில்  மோதி விபத்தில் சிக்கியது. இதில் மொத்தம் 10 பயணிகளுடன் பயணித்த பேருந்து திடீரென விபத்துக்குள்ளான நிலையில், உயிர்சேதம் ஏதுமின்றி ஓட்டுனருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்த ஓட்டுனரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மேலும், இந்த விபத்தால் ஜெமினி மேம்பாலம் முழுவதும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.  

தொடர்ந்து, விபத்து நடந்த நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து அறிவாலயம் சென்றதால் போக்குவரத்தை சரி செய்வதற்காக, 50 ஆவது ஆண்டு விழா கொண்டாடிய அண்ணா மேம்பாலத்தின் சுவர்களை உடைத்து சிக்கிக்கொண்ட பேருந்தை மீட்டு உடனடியாக போக்குவரத்தை சரி செய்துள்ளனர்.

இதையும் படிக்க : எதிர்க்கட்சிகள் அமளி - 2ம் நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்லும் நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதால் காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி முதற்கட்ட விசாரணையில், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து பேருந்து கீழே இறங்கும் பொழுது, அங்கு குறிப்பிட்டுள்ள வேகத்தை விட கூடுதல் வேகத்தில் பேருந்தானது இறங்கிய பொழுது  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்க சுவர்களில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

பொதுவாகவே மேம்பாலங்களில் இருந்து கீழே இறங்கும் பேருந்துகள் மட்டுமின்றி மற்ற வாகனங்களும் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செலுத்தப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.