ஆளுநர் மாளிகையின் விளக்க அறிக்கையானது பிரச்சனையை வேறு வகையில் வலியுறுத்துவது போல் உள்ளதாக எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தொடர் சர்ச்சையில் ஆளுநர் :
சமீபகாலமாகவே, தமிழ்நாடா? தமிழகமா? என்ற சர்ச்சையில் தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சிக்கி வருகிறார். இதற்கு விளக்கமளிக்கும் வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில், வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கவே, தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
எம்.பி. வெங்கடேசன் பேட்டி :
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. வெங்கடேசன், ஆளுநர் மாளிகையின் விளக்க அறிக்கையை படித்து பார்த்ததில் ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை வேறு வகையில் வலியுறுத்துகிறாரோ என்ற கேள்வி எழுவதாக கூறினார்.
கேள்வி எழுப்பிய எம்.பி. :
தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என குறிப்பிட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆளுநர் கூறியுள்ள விளக்கம் புதிய பிரச்னையை கிளப்புவதாகவும், மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஆளுநராகவே ஆர்.என்.ரவி இருப்பதாகவும், ஆளுநர் குறிப்பிட்டது போல் எந்தக் காலத்திலும் தமிழ்நாடு என்பது இல்லாமல் இல்லை எனவும் எம்.பி. வெங்கடேசன் சாடியுள்ளார்.