48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு - முதலமைச்சர் சொல்வது என்ன?

48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு - முதலமைச்சர் சொல்வது என்ன?
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோடை காலத்தில் பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர்,  குறுவை சாகுபடி நெல் உற்பத்தி திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார்.

குறுகிய காலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல் உற்பத்தியை உயர்த்தும் வகையில் விவசாயிகள் செயல்பட வேண்டும் எனவும், காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் வேளாண்மையை பெருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழரை பிரதமராக்க வேண்டுமென்று அமித்ஷா கூறியதை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபமோ? என்பது தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com