'2,000 ரூபாய் நோட்டு அறிவிப்பு' சூடுபிடிக்கும் ரியல் எஸ்டேட்! 

 '2,000 ரூபாய் நோட்டு அறிவிப்பு' சூடுபிடிக்கும் ரியல் எஸ்டேட்! 
Published on
Updated on
1 min read

இரண்டாயிரம் ரூபாய் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் செல்லாது என்று அறிவித்ததால் நிலம், வீடுகளில் முதலீடு செய்து கணக்கில் வராத பணத்தை மாற்ற பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதால் ரியல் எஸ்டேட் தொழில் திடீரென சூடுபிடித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப் படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் வங்கி கணக்கில்லாத ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் அதிகளவில் கணக்கில் வராத பணம் வைத்துள்ளவர்கள் அவற்றை நிலத்திலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். இதற்காக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்போர் ரியல் எஸ்டேட் புரோக்கர்களை நாடியுள்ளனர். இதற்காக சென்னையில் எங்கெல்லாம் பிளாட் போட்ட நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனிவீடுகள் விற்பனைக்கு உள்ளன என்பதை பற்றி விசாரித்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் ரியல் எஸ்டேட் தொழில் திடீரென சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் கணக்கில் வராத தங்க நகைகளை வாங்கி குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com