படகுகளுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்...குடும்பங்களுக்கு 10ஆயிரம்...அமைச்சர் வலியுறுத்தல்!

படகுகளுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்...குடும்பங்களுக்கு 10ஆயிரம்...அமைச்சர் வலியுறுத்தல்!

உதயநிதி ஸ்டாலின்  அமைச்சராவது நாட்டிற்கு தேவையில்லாதது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பொம்மையாக இருந்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

மாண்டஸ் புயல்:

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஆங்காங்கே சேதம் என்பது அதிகமாகவே காணப்பட்டது.

ஆய்வு மேற்கொண்ட ஜெயக்குமார்:

இந்நிலையில், சென்னை காசிமேடு துறைமுகம் பகுதியில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகளைப் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பொம்மையாக செயல்படும் முதலமைச்சர்:

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசால் மக்களுக்கு வேதனை தான் என்றும், பொருளாதார ரீதியாக மீனவர்கள் துன்பப்பட்டு வருகிறார்கள் எனவும், கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தும், எந்த ஒரு ஆய்வுக்கூட்டமும் நடத்தாமல் முதலமைச்சர் தென்காசிக்கு சுற்றுலா சென்றதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பொம்மையாக இருந்து வருவதாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிக்க: மாண்டஸ் புயல் கடந்து வந்த பாதை...!

நிவாரணம் வழங்க வேண்டும்:

மேலும், மாண்டஸ் புயலால் காசிமேட்டில் 200 படகுகள் சேதம் அடைந்துள்ளதாக கூறிய அமைச்சர், முழுமையாக மூழ்கி  சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு 20 லட்ச ரூபாயும், அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து குழு ஒன்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கேள்வி எழுப்பிய அமைச்சர்:

தொடர்ந்து பேசிய அவர், சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு நடைப்பாதை அமைத்தது. அந்த நடைப்பாதை தற்போது புயலால் சேதமடைந்தது. இதுகுறித்து பேசிய  அமைச்சர், மரப்பலகையில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைப்பாதை கட்டுவதா? என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, உதயநிதி அமைச்சராவது நாட்டிற்கு தேவையில்லாதது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.