மழைநீா் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு...!

வாணியம்பாடி அருகே பள்ளத்தில் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த மோனிகா என்பவர், அதே பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி 9-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். 

இதையும் படிக்க : தொடர் விடுமுறை : 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பள்ளியில் சுற்று சுவர் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. மழை காரணமாக, பள்ளியில் சுற்று சுவர் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.  

இந்நிலையில் பள்ளம் இருப்பதை அறியாமல் அங்கு விளையாடிய மாணவிகள் இருவரும், நிலை தடுமாறி பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். தொடர்ந்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற அம்பலூர் காவல்துறையினர் இரண்டு பள்ளி சிறுமிகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  பின்னர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.