சென்னையில் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்களது இல்லங்களில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அதன்படி, சென்னை மாநகரில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் நேற்று காலை முதலே ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை 150 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு பட்டாசு குப்பைகள் தனியாக சேகரிக்கப்படும் என்றும், பட்டாசு கழிவுகளை அகற்ற 19 ஆயிரத்து 600 தூய்மைப் பணியாளர்கள் பணியில் உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த பட்டாசு கழிவுகள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே செயல்படும் ஒரு தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.