உரிய அனுமதி இன்றி நீர்த்தேக்கம்...! ஆந்திர அரசுக்கு 100 கோடி அபராதம்...!!

உரிய அனுமதி இன்றி நீர்த்தேக்கம்...! ஆந்திர அரசுக்கு 100 கோடி அபராதம்...!!
Published on
Updated on
1 min read

உரிய அனுமதி இன்றி நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டதற்காக ஆந்திராவின் நீர்வள ஆதாரத்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அவுலபள்ளி, முடிவடு மற்றும் நெதிகுண்டபள்ளி ஆகிய கிராமங்களில் நீர்த்தேக்கம் அமைத்து, நீர்தேவை உள்ள நாட்களில் பயன்படுத்தவும், குடிநீர் தேவை பூர்த்தி செய்யவும் ஆந்திர அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் உரிய சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் நடைபெறுகிறது. இதனால் பல கிராமமங்கள் மற்றும் வனப்பகுதி நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்து வந்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில், முறையான உரிய சுற்றுச்சூழல் அனுமதி இன்றி இந்த நீர்த்தேக்கம் அமைப்பதற்கான திட்டப் பணிகளை ஆந்திர அரசின் நீர்வள ஆதாரத்துறை செயல்படுத்தி வருவதை உறுதி செய்தது. இதன் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த கட்டுமான பணிகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்ந்த மூத்த அறிவியலாளர், மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த பொறியாளர் மற்றும் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்தின் மூத்த பொறியாளர் ஆகியோரை கொண்ட ஆய்வு குழு உருவாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட ஆணையம் அக்குழு இந்த பகுதிகளில் நீர்த்தேக்கம் அமைக்க மேற்கொண்ட பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஆய்வு செய்து அதற்கான இழப்பீடு குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும், விதிகளை முறையாக கடைபிடிக்காத காரணத்திற்காக ஆந்திர அரசின் நீர்வள ஆதாரத்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இதனை மூன்று மாதத்திற்குள் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்திற்கு வழங்கவேண்டும் என அறிவறுத்தியுள்ளது. இதனை கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியம்  நதியில் கழிவுகள் குறைக்க பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com