நிர்பயா வழக்கின் 10 ஆண்டுகள்...மகளிர் ஆணையம் கடிதம்...!

நிர்பயா வழக்கின் 10 ஆண்டுகள்...மகளிர் ஆணையம் கடிதம்...!

டெல்லி நிர்பயா வழக்கின் 10ம் ஆண்டையொட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க இன்றைய நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைக்குமாறு இருஅவைத் தலைவர்களுக்கும் டெல்லி மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவை உலுக்கிய சம்பவம்:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான நிர்பயா என்ற பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. 

முக்கிய குற்றவாளிகள் கைது:

இதையடுத்து, நிர்பயா வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் மற்றும் முகேஷ்சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங், 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டனர். 

தண்டனை விதித்த நீதிமன்றம்:

தொடர்ந்து, முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் எனவும், மீதமுள்ள நான்கு பேருக்கும் மரண தண்டனையும் விதித்து உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

அதன்படி, கடந்த 2020 மார்ச் 20 ஆம் தேதி  திகார் சிறையில் அந்த நால்வரையும் துக்கிலிட்டதன் மூலம், நிர்பயா வழக்கில் நீதி கிடைத்தது.

நிர்பயா வழக்கு கடந்து 10வது ஆண்டு:

இந்நிலையில் டெல்லி நிர்பயா வழக்கின் 10ம் ஆண்டையொட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க இன்றைய நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைக்குமாறு இருஅவைத் தலைவர்களுக்கும் டெல்லி மகளிர் ஆணையத்தலைவர் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஓடும் பேருந்தில் கொல்லப்பட்ட மாணவி நிர்பயாவின் வழக்கு கடந்து 10 ஆண்டுகள் ஆகியும் நாளுக்கு நாள் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக  கூறப்பட்டுள்ளது. மேலும், நிர்பயா நிதியை அரசு குறைத்து வருவதாகவும், உச்சநீதிமன்ற வலியுறுத்தல்களை மீறி ஆசிட் விற்பனைக்கு அரசு தடை விதிப்பதில்லை எனவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.