செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்த சீனா: பூமியில் இருந்து அனுப்பிய லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை…

செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்த சீனா: பூமியில் இருந்து அனுப்பிய லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை…

செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய லேண்டர் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்தாண்டு ஜூலை மாதம் சீனா தியான்வென் -1 என்ற விண்கலத்தை அனுப்பியது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்யவும் செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இது விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலமானது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.

இந்நிலையில் தற்போது செவ்வாய்கிரகத்தில் தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஒரு லேண்டர் செவ்வாயில் தரையிறங்க 7 முதல் 9 நிமிடங்களே ஆகும். ஆனால் அந்த நேரத்தில் பூமியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். சீனா அனுப்பிய லேண்டரும் 9 நிமிட கடினமான நேரத்தை கடந்து செவ்வாயில் கால் பதித்துள்ளது. சீனாவின் ரோவர் அங்கு 90 நாட்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.

சீன விண்கலம் செவ்வாய் கிரத்தின் புவியியல் அமைப்பு ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும். அதேபோல் இந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்டுள்ள கேமராக்கள் செவ்வாய் கிரகத்தை படம் எடுத்து அனுப்பும். இதன்மூலம் செவ்வாய் கிரகம் குறித்த புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.