கொரோனாவை தடுக்க திமுக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை... செல்லூர் ராஜு ஆவேசம்!!

கொரோனாவை தடுக்க திமுக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை... செல்லூர் ராஜு ஆவேசம்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு தான் இதற்கு காரணம் என பழியை தூக்கி அந்த அரசு மீது போட்டுவிட்டு, மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.  

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, தளர்வுகளற்ற ஊரடங்கினை மாநில அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் இதன் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. 

இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: 

அனைவரும் மாஸ்க்குகளை அணிந்து, வீட்டிலிருந்தாலும் விலகி இருப்பதே நல்லது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உங்கள் சகோதரன் என்ற அடிப்படையிலும், மதுரைக்காரன் என்ற அடிப்படையில் அன்போடும் பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் இப்போது மிக வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா வைரசின் 2ஆம் அலை யாரும் எதிர்பாராத வகையில் மிக மோசமாக உள்ளது.பயில்வானாக இருந்தாலும் சரி நோஞ்சானாக இருந்தாலும் சரி அத்தனை பேரையும் பாதிக்கிறது. இப்படிப்பட்ட கொரோனா காலகட்டத்தில், முன்பு அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் இப்போதும்கூட பாராட்டி வருகின்றனர்.

ஆனால் இப்போதுள்ள திமுக அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது. இன்னும்கூட மத்திய அரசையே குறை சொல்லி வருகின்றனர். மாநில அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. மக்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு வேகம் காட்டவில்லை என்பது மக்கள் கருத்தாக உள்ளது.

மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற நிலைதான் உள்ளது. திமுக ஆட்சியில் அனைத்தும் இல்லை இல்லை என்ற நிலை தான்.

எனவே, அரசும் மாநகராட்சி நிர்வாகமும் மக்களை அச்சத்திலிருந்து போக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.