குற்றமிழைத்தவர் எச்சாதியினராயினும் தண்டிக்கப்பட வேண்டும்... கமல் ஆவேசம்!!

குற்றமிழைத்தவர் எச்சாதியினராயினும் தண்டிக்கப்பட வேண்டும்... கமல் ஆவேசம்!!

பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தற்போது வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், குற்றம் செய்தவர் எந்த ஜாதியை சேர்ந்தவராயினும் அவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் வலியுறுத்துள்ளார். 

சென்னை கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததான புகார் அண்மையில் வெளியாகி பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக கொரோனா காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு அனுமதித்திருந்த நிலையில், ஆசிரியர் ஒருவர் அறை நிர்வாணத்தில் வந்து பாடம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே குறிப்பிட்ட ஆசிரியரின் செய்கைக்கு கண்டனம் தெரிவித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன், இதுதொடர்பாக பிரத்யேக குழுவை அமைத்து தமிழக அரசு விசாரணையை முடுக்கி விட வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் மாணவிகளிடம் ஆசிரியர் அத்துமீறிய விவகாரம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் முன்னரே புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் கவனம் செலுத்தாமல் இருந்தது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குறைப்பதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, இந்த பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தை தொடர்ந்து, வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளதாகவும், இதனை விசாரிக்க அரசு உடனடியாக தனிக்குழுவை ஏற்படுத்தி போர்க்கால அடிப்படையில் அந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் ஒரு தகப்பனாக, இரு பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை பற்றிய தனது பதற்றமே ‘மகாநதி’ படத்தில் தான் காட்டியதாகவும், கண் இமைப்போல், பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக ஆன்லைன் வகுப்புக்காக இணைய சேவைகளை குழந்தைகள் கையாளும் போது மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும் என்றும், குழந்தைகள் கூறும் பிரச்சனைகளுக்கு செவிமடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

 இந்த பிரச்சனையை அரசியல் ஆதாயத்திற்காக சிலர் சாதி ரீதியாக திருப்புவதாக குறிப்பிட்ட அவர், குற்றத்தையோ அதன் தீவிரத்தையோ பற்றி பேசாமல், பேச்சை திருப்பினால், அது குற்றவாளிகளுக்கே சாதகமாகி விடும் என்றும் குற்றமிழைத்தவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் ஆனாலும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.