அரசை விமர்சித்தால் மருத்துவம் பார்க்க தடையா.? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மருத்துவர்.! 

அரசை விமர்சித்தால் மருத்துவம் பார்க்க தடையா.? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மருத்துவர்.! 

நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.ஜாக்சன் கொரோனா காலத்தில் அரசின் நடவடிக்கையை குறித்து விமர்சித்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டதால் ஒரு ஆண்டுக்கு மருத்துவர் தொழில் செய்ய தடை விதித்து மருத்துவ கவுன்சின் உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். 

அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், "இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வாட்ஸ்அப் வீடியோ ஒன்றை வெளியிட்டேன்.

இந்நிலையில் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்ததாக என் மீது நாகர்கோவில் மருத்துவம் மற்றும் கிராம சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 12.8.2020-ல் ரத்து செய்தது.

இதையடுத்து அரசு மற்றும் கொரோனா தொற்று நடவடிக்கைகளை விமர்சித்ததாக என் மீது குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தியும், மருத்துவ கவுன்சில் பதிவேட்டில் இருந்து எனது பெயரை இடைக்காலமாக நீக்கியும் முறையே 24.8.2020, 5.9. 2020 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.

மருத்துவ கவுன்சில் விதிப்படி மருத்துவர்களின் தொழில் நடத்தை குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் நேரில் விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும். என் மீது எந்தப்புகாரும் வராத நிலையில், மருத்துவ கவுன்சில் தாமாக முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. இதனால் இந்த உத்தரவுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து முறைப்படி விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் நான் ஒரு ஆண்டுக்கு மருத்துவர் தொழில் செய்ய தடை விதித்து மருத்துவ கவுன்சில் 28.4.2021-ல் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்குவந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.!