மயங்கி விழுந்து மனைவி பலி... கைக்குழந்தையுடன் தவித்த தொழிலாளி!! மனதை உருகவைத்த சம்பவம்!!

கொரோனாவால் வேலை இழந்த வடமாநில தொழிலாளி ரெயிலில் சென்றபோது அவருடைய மனைவி மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இதனால் கைக்குழந்தையை கையில் ஏந்தி செய்வதறியாமல் திகைத்து தவித்த சம்பவம் காண்போரை கலங்கச்செய்தது.

மயங்கி விழுந்து மனைவி பலி... கைக்குழந்தையுடன் தவித்த தொழிலாளி!! மனதை உருகவைத்த சம்பவம்!!

மேற்குவங்கத்தை சேர்ந்த கிரிட்டிபாஷ் சர்டார் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணத்தால் வேலை இழந்த அவர் தனது 2 வயது குழந்தை மற்றும் காச நோயால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு செல்வதற்காக வீட்டை காலி செய்து கொண்டு நேற்று ரயிலில் திருப்பூரில் இருந்து புறப்பட்டுள்ளார்.
 
ரெயில் காட்பாடி ரெயில்நிலையத்தை கடந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அவரது மனைவி வாந்தி எடுத்து, மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில் நிலைய அதிகாரி இது குறித்து அரக்கோணம் ரெயில்வே மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ரெயில் அரக்கோணம் வந்தடைந்தது 1 மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக வந்த டாக்டர்,  அவரை சோதித்து பார்த்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இது குறித்து கிரிட்டிபாஷ் சர்டாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்த சராபந்தி சர்டார் உடலை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் கிரிட்டிபாஷ் சர்டார், கையில் குழந்தையை ஏந்தியவாறு, செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தார். இக்காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜனை தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து விசாரித்து, வடமாநிலத்தை சேர்ந்த அந்த நபருக்கு உதவுமாறு உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் அரக்கோணம் தாசில்தா அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் இது பற்றி விசாரித்தார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் சொந்த ஊருக்குச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறினார்.