அணைகளில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

அணைகளில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப்பெரியாறு, பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, கடந்த சில வருடங்களாகவே சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக, நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், அணையில் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. 

அந்தவகையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டுப் பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக விநாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு 100 கன அடி வீதம் என மொத்தம் 300 கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அணையிலிருந்து நீரை திறந்து வைத்தார். இன்று முதல் 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரை விவசாய பெருமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோன்று, பாபநாசம் அணையிலிருந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கார் சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள  7 லட்சத்து 5 ஆயிரத்து 78 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.