அரசு மருத்துவமனைகளுக்கு தினமும் 800 சிலிண்டர்கள்... இலவசமாக வழங்குகிறது ராம்கோ சிமென்ட்ஸ்!!

அரசு மருத்துவமனைகளுக்கு தினமும் 800 சிலிண்டர்கள்... இலவசமாக வழங்குகிறது ராம்கோ சிமென்ட்ஸ்!!

மாநிலம் முழுவதும் உள்ள தனது கிளை நிறுவனங்களவில், மருத்துவத்திற்கென 5 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை ஏற்படுத்த உள்ளதாக மாநில அரசுக்கு ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 14 கன மீட்டர் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட முதல் அலகு கடந்த மே 14-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த ஆலையில் இருந்து 48 மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் தினமும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

அதுமட்டுமல்லாது தலா 56 கன மீட்டர் திறன் கொண்ட 4 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒன்று மதுரையில் நிறுவப்படும், மற்ற 3 மருத்துவ ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஆர்.ஆர்.நகர், அரியலூர் மற்றும் ஆலத்தியூர் ராம்கோ நிறுவன தொழிற்சாலைகளில் நிறுவப்படும். இந்த 4 ஜெனரேட்டர்கள் அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் உற்பத்தியைத் தொடங்கும்.

சுமார் ரூ.5 கோடியில் நிறுவப்படும் இந்த 5 மருத்துவ ஆக்சிஜன் ஆலைகள், ஒரு நாளைக்கு 800 சிலிண்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை எனவும், இவை இலவசமாக அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.