கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை - புதிய சலுகைகளை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை - புதிய சலுகைகளை அறிவித்தார் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து, தடுப்பூசி, ஆம்புலன்ஸ் மற்றும் நோய் தடுப்பு உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்தது. குறிப்பாக மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டர், கோவிட் டெஸ்டிங் கிட் உள்ளிட்டவற்றிற்கு 12 சதவீதம்  ஜிஎஸ்டி மற்றும் தடுப்பூசிகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. 

ஆனால் அத்தியாவசிய தேவையாக இருக்கும் இந்த உபகரணங்களுக்கான வரியை குறைக்க மாநிலங்கள் அறிவுறுத்தின. மேலும் தடுப்பூசிக்கான 5 சதவீத வரியை நீக்கினால், தனியார் மருத்துவமனையில் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளும் மக்கள் பயனடைவார்கள் என மாநில அரசுகள் தெரிவித்தன.

இதனிடையே கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஒன்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், 
வரி நீக்கப்படுவது மூலம் நாடு சந்திக்க நேரிடும் பிரச்சனையை எடுத்து விளக்கியிருந்தார். இருப்பினும் தடுப்பூசி, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றிற்கான வரியை குறைக்க தொடர்ச்சியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த சூழலில், வருகிற ஜூன் 21ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மாநிலங்கள் சந்திக்கும் நிதிச்சுமை மற்றும் வரிசை பிரச்னையும் குறைந்தது. 

இந்தநிலையில் இன்று மீண்டும் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடியது. இதில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கருப்புபூஞ்சை தொற்றுக்கான ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ஆம்புலன்ஸுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான தடுப்பு உபகரணங்கள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறினார். 

அதுமட்டுமல்லாது ஆம்புலன்ஸ், ரெம்டெசிவர், பல்ஸ்ஆக்சி மீட்டர், சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்கங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே இருந்தபடி தடுப்பூசிக்கான 5 சதவீத  ஜிஎஸ்டி தொடரும் என அவர் தெளிவுப்படுத்தினார்.

புதிதாக திருத்தம் செய்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி வரியானது வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை தொடரும் எனவும் ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.