
கடந்த சில நாட்களுக்கு முன் பீகாரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இந்த இரண்டாவது அலை பரவல் பீகாரில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நாளுக்கு நாள் தொற்று மெல்ல குறைய தொடங்கியது.
தற்போது தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை மொத்தமே 5,500க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் பலி எண்ணிக்கை இருந்து வந்தது. ஆனால், தற்போது 4,000 பேரை கூடுதலாக மரண எண்ணிக்கையில் சேர்ந்துள்ளது அரசு.
அதன்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,429-ஆக உயர்ந்துள்ளது. அம்மாநில சுகாதாரத் துறையினரின் சரிபார்ப்பிற்குபிறகு, இறந்தவர்களின் எண்ணிக்கை 3,951 இறப்புகள் அதிகமாகி உள்ளது தெரியவந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் அதிகாமானோர் உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தற்போதைய மரண எண்ணிக்கை, முதலில் சொன்ன பலி எண்ணிக்கையை விட 73 சதவீதம் அதிக பலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.