ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டெல்லிக்கு விநியோகிக்க அந்நிறுவனம் ஒப்புதல்: அரவிந்த் கெஜ்ரிவால்...

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டெல்லிக்கு விநியோகிக்க அந்நிறுவனம் ஒப்புதல்: அரவிந்த் கெஜ்ரிவால்...

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டெல்லிக்கு விநியோகிக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தேவையும் வெகுவாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு மூலம் வழங்கப்படும் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு குறைவாகவே கிடைப்பதால், பல்வேறு மாநிலங்கள் வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை அணுகியுள்ளது.

இதையடுத்து, அமெரிக்க தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களான மாடர்னா, வைபர் உள்ளிட்டவை இந்திய அரசிடம் மட்டுமே தங்களின் பரிவர்த்தனைகளை வைத்துக்கொள்வோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இந்நிலையில் மாநில அரசுகளுடனான பரிவர்த்தனைக்கு ரஷ்யா ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால், ஸ்புட்னிக் நிறுவனம் தங்களின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எத்தனை தடுப்பூசிகள் வழங்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், டெல்லியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த 80 லட்சம் டோஸ் தேவைப்படுவதாகவும், குழந்தைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ள மாடர்னா, பைசர் நிறுவன தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து பெற்று தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.