தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவ யார் காரணம்? கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது யார்? 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எடப்பாடி பதவிவிலகிய அன்று 20,952 ஆகவும், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற அன்று 27,387 ஆகவும் இருந்தது. அதன்பின்.??

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவ யார் காரணம்? கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது யார்? 

இந்தியா கொரோனாவின் முதல் அலையை  வெற்றிகரமாக சமாளித்தது. ஆனால் அதன்பின் வந்த இரண்டாம் அலை இந்தியாவையே புரட்டிப்போட்டது. அதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. முதல் அலையிலிருந்து மீண்ட தமிழகம் இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தற்போது ஆட்சியிலிருக்கும் திமுகவே காரணம் என்றும், இல்லை அப்போது ஆண்ட அதிமுகவே காரணம் என்றும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

இந்நிலையில், குற்றசாட்டுகளைத் தாண்டி உண்மை நிலை என்ன? என்பது பற்றி பார்க்கவேண்டியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அப்போது ஆண்ட அதிமுக அரசு காபந்து அரசானது. காபந்து அரசால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாமல் போனாலும், நடைமுறையில் உள்ள திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம். 


இந்த சூழலில் தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவத் தொடங்கியது. தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் கட்டுப்பாடுகளோடு கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தபின் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சேலத்திலேயே தங்கியிருந்தார். இதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக்கொண்டே சென்றது. 

இதுமட்டுமல்ல தேர்தல் முடிந்ததும் தேர்தல் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படாமல் கிட்டத்தட்ட 1 மாதத்துக்கு பின்பே அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக காபந்து அரசால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தமுடியாமல் போனது. 

ஒருவழியாக மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. அதன்பின் மே 3ம் தேதி எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் மே 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதும் கொரோனா பணிகளை முடுக்கிவிட்ட அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணமும் செய்தார். 

ஆனால் அப்போதைய சூழலில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்தது. இதற்கு காரணம் திமுக அரசு தான் என்றும், கொரோனா முதல் அலையை அதிமுக அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது. ஆனால் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் வெளிப்படையாகவே வைத்தனர். ஆனால் திமுக தரப்பில் ஆரம்பத்திலேயே கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அதிமுக தவறியதே இந்த நிலைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. 

உண்மை நிலை என்ன என்றால் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த  மே 3ம் தேதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20,952 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதன்பின் ஸ்டாலின் முதல்வராக மே 7ம் தேதி பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த நாள் கொரோனா பாதிப்பு 27,387 என்ற எண்ணிக்கையை தொட்டிருந்தது. 

அதன்பின் உயரத்தொடங்கிய கொரோனா பாதிப்பு அரசின் முயற்சியால் தற்போது குறையத்தொடங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வரான பின் தற்போது (02-06-2021) மீண்டும் 26,513 என்ற அளவில் குறைந்துள்ளது. இது ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற போது இருந்ததை விட குறைவானதே. 

மேலும் கடந்த 28ம் தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனம் "7ஆம் தேதி வரை அவர் காபந்து அரசின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது ஆக்சிஜன் ஒரு நாள் இருப்பு 230 மெட்ரிக் டன்னாக இருந்தது. அது பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று ஒரு நாள் இருப்பு 650 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். அதாவது திமுக அரசு பொறுப்பேற்று 25 நாளில் ஆக்சிஜன் கையிருப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது.