இவர்கள் ஏன் பி.டி.ஆரை கண்டு இப்படி பதறுகிறார்கள்? 

இவர்கள் ஏன் பி.டி.ஆரை கண்டு இப்படி பதறுகிறார்கள்? 

தனது நேர்த்தியான, புள்ளிவிவர செயல்பாடுகளால் இந்திய அளவில் கவனிக்கப்படும் நபராக உருவெடுத்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். கடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் நிர்மலா சீதாராமனிடம் அவர் எழுப்பிய கேள்வி இதுவரை எந்த மாநில அமைச்சரும் எழுப்பாதது. இதுவே அவர் இந்திய அளவில் பேசப்பட காரணம்.

இந்நிலையில் வடஇந்திய மீடியாக்கள் யார் இந்த பழனிவேல் தியாகராஜன் என்று அவர் பற்றி கட்டுரைகள் எழுதி வருகின்றன. அந்த அளவு அவர் ஜி.எஸ்.டி கூட்டத்தில் பேசியதன் தாக்கம் இருந்தது. இதற்கு முன் இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களே ஒன்றிய அரசை இந்த அளவு கேள்வி எழுப்பின. 

அதிலும் அவர் முன்வைத்த புள்ளிவிவரங்கள் எதற்குமே ஒன்றிய அரசின் பிரதிநிதிகளால் பதில் சொல்ல இயலவில்லை. இதன் வெளிப்பாடே தமிழகத்தை சேர்ந்த பாஜகவினர் பழனிவேல் தியாகராஜன் மேல் வைத்த விமர்சனங்கள். அதிலும் குறிப்பாக அவர் விமர்சனம் வைப்பவர்கள் யாரும் சாதாரண நபர்கள் இல்லை. அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள். இதற்கு முன் அவர்கள் மட்டுமே பிறரை இப்படி விமர்சித்திருக்கிறார்கள். முதன் முதலில் பழனிவேல் தியாகராஜன் மூலம் அந்த சொல் அவர்களையே திருப்பி அடிக்கிறது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அதனால் தான் தங்கள் கட்சியை சேர்த்தவர் வாயிலிருந்து அந்த வார்த்தை வரும்போது அமைதி காக்கும் அவர்கள் பழனிவேல் தியாகராஜன் வாயிலிருந்து வரும்போது "உங்கள் திறனை செயலில் காட்டுங்கள்; கண்ணியமாக விமர்சியுங்கள்’'என்று சொல்கிறார்கள். பழனிவேல் தியாகராஜன் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் தான் தற்போது ஜக்கி வாசுதேவ் என்பவரை அமைதியாக்கி அரசை பாராட்ட வைத்திருக்கிறது.

இத்தனைக்கும் பழனிவேல் தியாகராஜன் திமுகவின் பெரும் அரசியல்வாதி அல்ல, இவ்வளவு ஏன் அவர் அமைச்சர் ஆகும் வரை அவர் யார் என்று கூட பலருக்கு தெரியாது. ஆனால் இன்று அப்படி இல்லை. இனி அவர் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் இந்தியாவே கவனிக்கும். அதுவும் இந்தியாவின் பெரிய மற்றும் தனித்த கலாச்சாரம் கொண்ட மாநிலங்கள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைகின்றனர். அந்த மாநில முதல்வர்கள் பலர் பாஜகவை வெளிப்படையாக எதிர்க்கும் கட்சியை சார்ந்தவர்களாவும் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இப்போது தமிழக நிதியமைச்சரின் வாயில் இருந்து வரும் புள்ளிவிவரங்களுக்காக காத்துக்கொண்டிருகிறார்கள்.