சூட்கேசில் துண்டு துண்டான நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரபல இயக்குனரின் சடலம்.! பெற்றோரே கொலைசெய்த கொடூரம்.!

ஈரான் நகரில் இருக்கும் ஒரு சாலையில் கிடந்த சூட்கேசில் துண்டு துண்டான நிலையில் சடலம் கிடந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரிக்கையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தவர் பிரபல இயக்குநர் பாபக் கோரம்டின் என்று தெரியவந்தது. பாபக் கோரம்டின் என்னும் 47 வயதான இயக்குநர் புகழ்பெற்ற குறும்பட இயக்குநராவார். இவர் இயக்கிய குறும்படங்கள் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றுள்ளன. இப்படி புகழ்பெற்ற இவரை இப்படி கொடூரமாக கொலை செய்தது யார் என காவல்துறையினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவரது பெற்றோரே அவரை கொலை செய்து இப்படி சூட்கேசில் அடைத்து வைத்துள்ளனர் என திடுக்கிடும் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து அவரது பெற்றோரை கைதுசெய்த காவல்துறையினர் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது 47 வயதாகியும் திருமணம் செய்யாததால் விரக்தி அடைந்த பெற்றோர் இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து அவரது பெற்றோர் கூறுகையில் “என் மகன் தனிமையில் இருந்தான், அவர் எங்களைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். அவரது செயல்பாடுகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சமாக இருந்தது. இதனால் நாங்கள் ஒரு நாளும் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. யார் கூறுவதையும் கேட்காமல் விருப்பப்பட்டதைச் செய்து வந்தான். இதன் காரணமாகவே அவரை கொலை செய்ய நானும் எனது மனைவியும் முடிவு செய்தோம். இதற்காக நாங்கள் துளியும் வருந்தவில்லை” எனக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.