போட்ட வேஷம் மாறியதோ? இதுதான் விடியலா?? டாஸ்மாக் திறப்பது குறித்து ஸ்டாலினை விமர்சித்த வானதி ஸ்ரீனிவாசன்

டாஸ்மாக் திறப்பு அவசியமா ?? ஒரு வருடத்தில் முதல்வர். போட்ட வேஷம் மாறியதோ? இதுதான் விடியலா?? என டாஸ்மாக் திறப்பது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

போட்ட வேஷம் மாறியதோ? இதுதான் விடியலா??  டாஸ்மாக் திறப்பது குறித்து ஸ்டாலினை விமர்சித்த வானதி ஸ்ரீனிவாசன்
தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ஆவது அலையின் தாக்கம் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகின்றது.
 
இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
ஆனாலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பித்தபோது, மதுக்கடைகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, மதுக்கடைகளை திறக்க அப்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அப்போது, டாஸ்மாக் திறக்கக் கூடாது என்று எதிர் கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டானின், மற்றும் திமுகவினர் வீடுகளுக்கு வெளியில் நின்று கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
ஆனால், தற்போது கொரோனா தாக்கம் அதிகமாகி இருக்கும் சூழலில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தனது முகநூல் பக்கத்தில், “ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில், இறப்பு நூற்றுக்கணக்கில், டாஸ்மாக் திறப்பு அவசியமா?, ஒரு வருடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட வேஷம் மாறியதோ? ஒலித்த கோஷம் மறந்ததோ?, இதுதான் விடியலா??” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.