தயவு செய்து இதுபோல ஆபத்தான இடங்களுக்கு செல்லவேண்டாம்... ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்யும் முன்னாள் அமைச்சர்!!

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டு முதல்வராக பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஸ்டாலினுக்கு கொரோனா சூழலில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என  முன்னாள் சுகாதார துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

தயவு செய்து இதுபோல ஆபத்தான இடங்களுக்கு செல்லவேண்டாம்... ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்யும் முன்னாள் அமைச்சர்!!
கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை அதிகமாக இருந்ததால், ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது.
 
ஆனாலும், முதல்வர் ஸ்டாலின் எந்நேரமும், கொரோனா தடுப்பு பணிகளில் நேரடியாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கோவைக்கு கொரோனா ஆய்வுக்காக சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் பிபிஈ கிட் அணிந்துகொண்டு கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது. ஸ்டாலினின் இந்த தைரியமான முடிவை பலரையும் வியக்கவைத்தது. இந்நிலையில், ஸ்டாலினின் இந்த ரிஸ்க் குறித்து  முன்னாள் தமிழக சுகாதார துறை அமைச்சரும் டாக்டருமான எச்.வி.ஹண்டே முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில் அவர், "கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிப்பது தொடர்பாக நீங்கள் அறிவித்த அறிவிப்பை விட, உங்களது பாசமிகு தந்தை கருணாநிதிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்திருக்கவே முடியாது. கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது எனக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. எனக்கு பெருமை அளிப்பது என்னவென்றால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 94 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன்.
 
எனது தந்தை டாக்டர் எச்.எம்.ஹண்டே அங்குதான் டாக்டராக பணியாற்றினார். நான் தங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கிறேன். தயவு செய்து இதுபோல ஆபத்தான இடங்களுக்கு செல்லவேண்டாம். உங்களது ஆரோக்கியமே, தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆரோக்கியமாகும். இரவு பகலாக உங்களது அயராத உழைப்பினால் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களுடைய தொடர் வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
 
தீவிரமான எம்ஜிஆர் விசுவாசியான எச்.வி.ஹண்டேவுக்கு  இப்போது 94 வயதாகிறது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர். தீவிரமான கருணாநிதியின் எதிர்பார்ப்பாளரும் கூட. இவர் 1980 சட்டமன்ற தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் கருணாநிதிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 
என்னதான் அரசியல்வாதியாக இருந்தாலும், அரசியலையும், மருத்துவ தொழிலையும் தனித்தனியாக அணுகி வந்தவர். அதனால்தான், கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கருணாநிதிக்கு சிகிச்சை தருவதாக டாக்டர் ஹண்டேவும் வந்திருந்தார். இப்போது ஸ்டாலினின் உடல்நிலை குறித்தும் அக்கறையாக அட்வைஸ் செய்துள்ளது வியக்கவைத்துள்ளது.