வாய் திறக்காத அதிமுக தலைமை… மணிகண்டன் - சாந்தினி விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?

வாய் திறக்காத அதிமுக தலைமை… மணிகண்டன் - சாந்தினி விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?

அண்மை காலமாக அதிமுகவில் இருந்து முறையான காரணமின்றி முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு வந்த நிலையில், பெண்ணை ஏமாற்றி பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சரை மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. 


அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் எனக்கூறியே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த எம்.எல்.ஏ-க்களும், நிர்வாகிகளும் நீக்கப்பட்டு வருவது அதிமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதிமுகவை சேர்ந்த ஒருவர் மீது புகார் வந்திருந்தால் அதுகுறித்து தீர விசாரிக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்கவும் கால அவகாசம் வழங்கவேண்டும். ஆனால் அப்படி எதுவுமே செய்த ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் தலைமைகள் உடனடியாக இன்னார் இன்னார், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிடுகின்றனர் என தொண்டர்களும், நிர்வாகிகளுமே மறைமுகமாக குற்றம்சாட்டுகின்றனர். 

குறிப்பாக எம்.எல். ஏ-க்கள் சிலரின் மீது அமைச்சர்கள் அதிருப்தியில் இருந்தால் அவர்கள் மீது உடனடியாக தவறான தகவல்களை பரப்பி கட்சியில் இருந்து நீக்கும் அளவிற்கு கொண்டுசெல்வதாக அதிமுகவினர் முணுமுணுக்கும் சத்தம் கேட்கத்தான் செய்கிறது. 

அப்படிதான், சட்டமன்ற தேர்தலில் பலரின் பேச்சைக்கேட்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கபட்டதால், தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக பெருந்துறை தொகுதியில் நின்றார். இதையொட்டி அவர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 
 
இதேபோன்று, முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன், சத்ய பன்னீர்செல்வம், வெங்கடாசலம்,  வி.நீலகண்டன், முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், நாமக்கல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்பட நூற்றுக்கும் அதிகமான நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். அண்மையில், முன்னாள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நிலோபர் கபிலும் முறையான காரணமின்றி நீக்கப்பட்டார். 

இப்படி அடுத்தடுத்து முறையான காரணம் இன்றியும், புகார் நிரூபிக்கப்படாத பலர் கட்சியில் இருந்து நீக்கியது அதிமுக தலைமை. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்துள்ளது தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

அதிலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் இருக்கும் புகைப்படங்கள், அவருடன் பேசிய உரையாடல்கள், மணிகண்டனால் ஏற்பட்ட கருவை கலைக்க அவர் மருத்துவரிடம் பேசிய ஆடியோவும் வெளியாகி அதிரடியை கிளப்பியுள்ளது.. கிட்டதட்ட கடந்த ஒரு வாரமாக எங்கு பார்த்தாலும், முன்னாள் அமைச்சரின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதும், இதுகுறித்து அதிமுக தலைமை வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருவது ஏன் என பாதிக்கப்பட்ட முன்னாள் அதிமுகவினர் கொதிக்கின்றனர்.

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மீது அவரது மனைவியும், மகனும் ஜெயலலிதாவை சந்தித்து கண்ணீர் மல்க தனிப்பட்ட வாழ்கை தொடர்பாக புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா, செங்கோட்டையனிடமிருந்து அமைச்சர் பதவி மற்றும் கட்சி பதவியை   பறித்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தலைமை தற்போது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களா என பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.