ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை  ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றும் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுகிறதா? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

சென்னை ஓமந்தூரார் வளாகத்தில்  அமைந்துள்ள  கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் இயங்க போதுமானதாக இல்லை என்பதால்,அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.  

தற்போது கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் 250 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனை அமையவுள்ளதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் அங்கு ஆய்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,

இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டவுடன் ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படும் என செய்திகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளதாகவும்  ஓபிஎஸ் கூறியுள்ளார். 

புதிய மருத்துவமனை அமைப்பதை அதிமுக சார்பில் வரவேற்பதாக கூறியுள்ள அவர், 

ஆனால், ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படுவது ஏற்கத்தக்கதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.  

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையை கிண்டிக்கு மாற்றப்படுவதை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.