தலைமைச் செயலாளரை விடுவிக்க இயலாது.... முதல்வர் மம்தா மறுப்பு

தற்போதைய நெருக்கடி சூழலில் தலைமைச்செயலாளரை விடுவிக்க இயலாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளரை விடுவிக்க இயலாது....  முதல்வர் மம்தா மறுப்பு

மேற்குவங்கத்தில்  யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். 

இந்த ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் மம்தா மற்றும் அரசு அதிகாரிகள் 30 நிமிடங்கள் காக்க வைத்தது பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக மேற்கு வங்க தலைமைச்செயலாளரை மத்திய அரசு மீண்டும் அழைத்து ஆணை பிறப்பித்தது. ஆணைப்படி இன்று காலை டெல்லியில் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சி அலுவலகத்தில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் மாநில அரசு அவரை முறைப்படி விடுவிக்காததால் அவர் மேற்கு வங்க தலைமைச் செயலாளராக நீடித்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் தற்போதைய இக்கட்டான நேரத்தில் தலைமைச்செயலாளரை விடுவிக்க முடியாது என்றும், தலைமைச்செயலாளரை திரும்ப அழைத்துக் கொண்ட முடிவை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவை ரத்து செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளார்.