தற்காப்புக்கலை பயிற்சியாளர் மீதான விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி 

பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீதான விசாரணையை தொடங்கி உள்ளது சிபிசிஐடி.

தற்காப்புக்கலை பயிற்சியாளர் மீதான விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி 

சென்னை பத்ம சேஷாத்ரி, மில்லியனம் பள்ளி உட்பட சில பள்ளிகளில் பகுதிநேர தற்காப்புக் கலை பயிற்சியாளராக பணியாற்றி வந்தார் கெபிராஜ்.

இவரிடம் கராத்தே பயிற்சி பெற வந்த முன்னாள் மாணவி ஒருவருக்கு வெளி மாவட்டங்களுக்கு போட்டிகளுக்குச் செல்லும்போதும் தனது அலுவலகத்தில் வைத்தும் பயிற்சியாளர் கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாலியல் துன்புறுத்தல், பெண் வன்கொடுமைச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி. ஐ.டி-க்கு மாற்றக்கோரி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டி.ஜி.பி-யிடம் பரிந்துரைத்ததை அடுத்து கெபிராஜ் வழக்கு விசாரணையை சி.பி.சி. ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி திரிப்பாதி உத்தவிட்டார். 
இந்நிலையில் தற்காப்புக் கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீதான வழக்கு விசாரணையை துவங்கியுள்ள சி.பி.சி. ஐ.டி விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் லதாவை நியமனம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கெபிராஜ் மீதான வழக்கு விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.